இறையுணர்வு, அனைத்துலக அமைதி, மனித மாண்பு, சமய உரிமை - இவைகளுக்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின் பொன் மொழிகள்.
விவிலியக் கருத்து வளங்களை உணர்த்தும் விவிலியத் தேடல்கள்,
ஞாயிறு திருப்பலிக்கு நேயர்களைத் தயாரிக்கும் நோக்கிலான ஞாயிறு வாசகங்களை மையமாகக் கொண்ட ஞாயிறு சிந்தனைகள்,
சமூக அவலங்களைச் சாடி, சமுதாய விழிப்புணர்வுக்குப் பாதை காட்டும் குறு நாடகங்கள்,
உலக நிகழ்வுகளை உரசிப் பார்க்கும் வாரம் ஓர் அலசல்,
பல ஆன்றோர், பெரியோரின் வாழ்க்கை அனுபவப் பரிமாற்றங்கள், சாதனைகளை அறியத் தரும் நேர்காணல்கள், திருத்தந்தையின் சுற்றுமடல்கள், செய்திகள் பற்றிய வல்லுனர்களின் அலசல்கள்,
வானொலி அலையால் பிணைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களின் கருத்துப் பரிமாற்றங்களை அறியாமல் நிகழ்ச்சி சிறப்புற அமையாது என்பதை உணர்த்தும் அஞ்சல் பெட்டி
என நாளுக்கு நாள் பல்சுவையூட்டும் நம் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் மூன்று முறை ஒலிபரப்பாகின்றன.
வானொலி தவிர இணைய வலைத் தொடர்பு (internet) அமைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.
அன்றாடக் காலை நிகழ்ச்சிகள்:
வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை நாங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள் இவை:
ஞாயிறு : ஞாயிறு சிந்தனை
திங்கள் : பல்சுவை, அஞ்சல் பெட்டி
செவ்வாய் : வாரம் ஓர் அலசல்
புதன் : விவிலியத் தேடல்
வியாழன் : புதன் பொது மறை போதகம், திருச்சபையில் திருப்புமுனைகள்
வெள்ளி : நேர் காணல்
சனி : நாடகம்
இவையன்றி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் (ஞாயிறு மாலையும் திங்கள் காலையும் தவிர) செய்திகள் இடம் பெறுகின்றன. அன்புள்ளங்களே, இந்நிகழ்ச்சிகள் கால ஓட்டத்தில் மாறும். புதிய நிகழ்ச்சிகள் புதிய பரிணாமத்துடன் அவ்வப்போது ஒலிக்கும். இதில் உங்கள் ஆலோசனைகளுக்கு என்றுமே இடமுண்டு.
நம் தொடர்பகங்கள் :
வானொலி நேயர்கள் எளிதாகக் கருத்துக் கடிதங்களை அனுப்புவதற்கும், தபால் செலவைக் குறைப்பதற்கும், தபால்களைத் துரிதமாய்ப் பெறுவதற்கும் வசதியாக, சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் தற்சமயம் கிளை அலுவலகங்கள் உள்ளன.
வானொலி தவிர இணைய வலைத் தொடர்பு (Internet) அமைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.
மேலும் விபரங்களுக்கு :
வத்திக்கான் வானொலி, இந்திய அலுவலகம், இலொயோலாக் கல்லூரி, தபால் பெட்டி எண் 3301, சென்னை 600 034.
அல்லது
இலங்கை முகவரிகள்
அருட்திரு டி.ஜே.கிருபாகரன், ஆயர் இல்லம், தபால் பெட்டி எண் 02, யாழ்ப்பாணம், இலங்கை
அல்லது
அருட்திரு. தமிழ் நேசன், சமூகத் தொடர்பு மையம், தூய வளன் தெரு, பெட்டா, மன்னார்.
தலைமையக முகவரி
Vatican Radio, Tamil Programs, Indian Section, 00120 Vatican City.
என்பவைகளோடு தொடர்பு கொள்ளுங்கள்.
மின் அஞ்சல் : tamil@vatiradio.va
மேலும் விபரங்களுக்கு வத்திக்கான் வானொலி அல்லது வத்திக்கான் இணையதளங்களைத் திறக்கலாம்.
வத்திக்கான் வானொலி இணையதளம் : www.vaticanradio.org
வத்திக்கான் இணையதளம் : www.vatican.va
விபரங்களும் மாத இதழும் www.anbinmadal.org என்ற இணையத்தளத்திலும் தரப்பட்டுள்ளன.
நேயர் சந்திப்புகள்
1931ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி, 1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பைத் துவக்கியது. தமிழ் ஒலிபரப்பில் 50 ஆண்டுகளை(2015) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்த வானொலி.
ஒவ்வோர் ஆண்டும் இயலவில்லையெனினும், முடிந்த வரையில் அவ்வப்போது நேயர்களைச் சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம். சேலம், திருச்சி, சென்னை, வேலூர், ஈரோடு, நாகர்கோவில், வேளாங்கண்ணி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் இலங்கையில் மன்னார், கட்டன் ஆகிய இடங்களிலும் நேயர் கூட்டங்களை நடத்தியுள்ளோம்.
வத்திக்கான் வானொலியின் தமிழ்ச் சேவை செப்டம்பர் 4, 2005 அன்று திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மைய அரங்கில்; தனது 40 ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பித்தது.
திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி டிவோட்டா, திண்டுக்கல் ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி, மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார், திருச்சி நகர மேயர் திருமதி சாருபாலா தொண்டைமான், திருச்சி தூய அன்னாள் சபை அதிபர் அருட் சகோதரி எட்விச் டோலரோசா, திருச்சி ஜமால் முகமது கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் பீ.மு.மன்சூர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியை முனைவர் சித்ரா, திரைப்பட இயக்குனர் திரு.இரா. காளீஸ்வரன், திரைப்பட இயக்குனர் திரு.பீ. லெனின், திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரைகளும் உரைகளும் ஆற்றினர்.
இவ்விழாவில் தமிழ் நேயர்களின் பங்கு குறிப்பிடும்படியானது. இதில் அவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழ் ஒலிபரப்பு பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.
வத்திக்கான் வானொலி தமிழ்ப்பிரிவின் 45ம் ஆண்டு கொண்டாட்டம் 2010ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருச்சி புனித வளன் கல்லூரியில் திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி டிவோட்டா தலைமையில் நேயர்களின் பெருமெண்ணிக்கையிலான பங்கேற்புடன் சிறப்பிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் நேயர்களின் கருத்தறிதலே முக்கிய இடம் வகித்தது.